‘G-20 India’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா தலைமையேற்று நடத்தும், ஜி-20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. டெல்லி முழுவதுமே பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ‘G-20 India’ என்ற செயலியை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது, ‘G-20 India’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்த செயலி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடன் தடையின்றி தொடர்பு கொள்ள அமைச்சர்களுக்கு உதவும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த செயலியின் உதவியுடன், வெளிநாட்டுக் குழுவினருடன் எளிதில், தடையின்றி தொடர்பு கொள்ள இயலும்.
வெளிநாட்டுக் குழுவினர், நாட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் செல்லவும், பாரத் மண்டபத்திற்குச் செல்லவும் இந்த செயலி உதவும்.
இந்த செயலியானது, நிகழ்ச்சியுடன் தொடர்புடைய தகவலுக்கு ஒரு விரிவான, இருவழி தொடர்பு ஏற்படுத்த, வழிகாட்டக் கூடிய வகையில் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
இதில், ஜி-20 இந்தியா 2023 நிகழ்ச்சிக்கான ஒரு காலண்டர், இந்தியாவின் வளங்கள், ஊடகம் மற்றும் ஜி-20 பற்றிய உள்ளார்ந்த விவரங்களும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.