கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வந்தது. கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், காவிரியில் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது.
கடந்த 15.07.2023 -ம் தேதி அன்று, பிற்பகல் நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.81 அடியாக இருந்தது. கொள்ளவு 85.434 டி.எம்.சி நீர் இருந்தது. நீர் வரத்து 1.08 லட்சம் கன அடியாக இருந்தது.
இதனால், குறுவை சாகுபடிக்கு, மேட்டூர் அணையில் இருந்து, 25,000 அடி கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 5.20 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துபோனதால், அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அணையின் நீர் மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரிந்தது.
இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,031 கனஅடியாகச் சரிந்தது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,535 கன அடியில் இருந்து 3,031 கனஅடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 47.33 அடியிலிருந்து 46.81 அடியாகச் சரிந்தது. தற்போது நீர் இருப்பு 15.86 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதன் காரணமாக, அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் உள்ள நந்தி சிலை முழுமையாகத் தெரிந்தது.