குணசேகரனாக நடித்து மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மாரிமுத்து பிரபலமானார். இந்த சின்னதிரைத் தொடரில் இவர் பேசும் “இந்த மா ஏய்” என்ற ஒற்றை வசனத்தின் மூலம் அவர் பிரபலமடைந்தார். இவர் தொடர்பான மீம்கள் சமீபத்தில் ட்ரெண்ட் ஆகின.
இதற்கு முன்பே ’கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். ’பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் சின்னதிரைத் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு மாரிமுத்துவை கொண்டு செல்ல, அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. மரணமடைந்த அவருக்கு வயது 57 ஆகும். மாரிமுத்துவின் திடீர் மறைவு அதிர்ச்சியை மட்டுமின்றி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.