ஒரு குறிப்பிட்ட மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. மனிதர்கள் தங்களுடைய அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது.
இதனால், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் ஐக்கிய நாடுகளின் சபையின் யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. அதன்படி,1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ-வின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ந் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ந் நாள் சர்வதேச எழுத்தறிவு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில், மனிதர்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் எழுத்தறிவின்மையைப் போக்குவது, எழுத்தறிவு தொடர்பாக உலக நாடுகளின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவது உள்ளிட்டவைச் சர்வதேச எழுத்தறிவு தினத்தின் நோக்கம் ஆகும்.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள், நிலையான அமைதியான உலகத்தை உருவாக்குதல், எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.