நடுக்கடலில் தத்தளித்த காசிமேடு மீனவர்களைக் இந்தியக் கடலோரக் கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
கடந்த 24-ந் தேதி காசிமேடு துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 9 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடந்த 26-ந் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், விசைப்படகு நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் செய்வதறியாது தவித்தனர்.
பின்னர், தங்களிடம் இருந்த வயர்லெஸ் மூலம் அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மற்ற மீனவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து, கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கடலோரக் காவல்படையினர் மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அந்த வழியாகச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலிலிருந்த மீனவர்களுக்குத் தண்ணீர் மற்றும் உணவு உள்ளிட்டவைக் கொடுத்து உதவி செய்தனர். இதுகுறித்து, சரக்கு கப்பல் அதிகாரிகள் இந்தியக் கடலோரக் கடற்படையினர் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விரைந்து வந்த இந்தியக் கடலோரக் கடற்படையினர் பழுதடைந்த படகிலிருந்த மீனவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
பின்னர், விசைப்படகைத் தங்களது படகில் கயிறு மூலம் கட்டி இழுத்தபடி அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். இதைத்தொடர்ந்து, 9 மீனவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் அவர்களைப் பத்திரமாக அனுப்பி வைக்கவுள்ளனர்.