விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தியில் முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்த நாளை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, விநாயகர் திருக்கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தியும், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி நீா்நிலைகளில் கரைப்பதையும் பக்தர்கள் கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில், விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாரீஸ் கார்னர், பரசைவாக்கம், மயிலாப்பூர், அடையாறு, தி.நகர், கிண்டி, தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாட்டில் திருச்சி, கோவை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற வருகிறது.
இதேபோல், சிலைக்கு பயன்படுத்தக்கூடிய அலங்கார குடை, மாலை, தோரணம் ஆகியவையும் ஜோராக விற்பனையாகிறது.
இந்த வருடம், பஞ்சமுக விநாயகர், மணக்குள விநாயகர், சித்தி விநாயகர், சிங்க வாகன விநாயகர் என சுமார் 15-க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கு மாவு, பேப்பர் கூழ், ரசாயனம் இல்லாத மாவு உள்ளிட்டவைகளால், 2 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது.
ஒரு சிலை ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை குழுவாக வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.
இதேபோல், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துபவர்களும், அதற்கான மேற்கூரை அமைத்து, அலங்காரம் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டியுள்ளது.