தந்தை பாசத்தினால் திமுக அமைச்சர் உதயநிதிக்கு நேசக்கரம் நீட்டுவது நியாயமா? என தமிழக முதல்வருக்கு, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, “யாராக இருந்தாலும், மத மோதல்களை உருவாக்கும் நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசியல், மதம், ஜாதி என எந்த அடிப்படையிலும் பிரச்சனைகளைத் தூண்டும் முயற்சிகள் இரும்புக் கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும்” என்று கடந்த மே 11, 2022 அன்று சொன்னீர்களே? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஹிந்து மத நம்பிக்கைகளை விமர்சித்து மத ரீதியிலான பிரச்சினையை தூண்டும் வகையில் பேசியுள்ளாரே?
முதல்வராக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை உள்ள நீங்கள், தந்தை பாசத்தினால் உதயநிதிக்கு நேசக்கரம் நீட்டுவது நியாயமா? பாசமா? கடமையா? என்கிற போது கடமையை மறந்து பாசத்திற்கு இடம் கொடுத்து விட்டீர்களே?
மனுநீதி சோழன் என்று சுவரொட்டிகள் தங்களை வாழ்த்தினால் மட்டும் போதுமா? அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டாமா? என நாராயணன் திருப்பதி அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.