தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் போராட்டம் வெற்றி அடையப் பாஜக முழு ஆதரவு என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தங்கள் குடும்பத்தினரின் தொழில்களை முன்னேற்றுவதையே மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறதே தவிர, சாதாரண பொதுமக்கள் குறித்து எந்த அக்கறையும் திமுகவுக்கு இல்லை. மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப் பதிவு வரி உயர்வு எனக் கட்டணங்களை உயர்த்தி எளிய மக்கள் வயிற்றில் அடித்து வருகிறது.
குறிப்பாக, சென்ற ஆண்டு, திமுக அரசு, அனைத்து நுகர்வோருக்கான மின் கட்டணத்தை 50% வரை உயர்த்தியது. தேர்தல் வாக்குறுதியில் கூறியதற்கு நேரெதிரான திமுகவின் இந்த கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழக பாஜக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. கட்டண உயர்வை அமல்படுத்தினால் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடக்கப்படும் இதனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்து விடுவார்கள் எனவும் எச்சரித்திருந்தோம். ஆனால், அப்போதைய மின்துறை அமைச்சர், சாராயம் விற்பதிலும், சூரிய ஒளி மின்சார திட்டங்கள் மற்றும் ட்ரான்ஸ்பார்மர் வாங்குவதில் ஊழல் செய்வதிலும் கவனமாக இருந்ததால், பெயரளவுக்கு சிறிய மாற்றத்துடன் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டார். அதன் விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. பல ஆயிரம் நிறுவனங்கள் முடங்கி விட்டன.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் உயர்த்திய மின்கட்டணத்தையே தொழில்நிறுவனங்கள் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது, இந்த ஆண்டு ஜீலை மாதம், மின் கட்டணத்தை மீண்டும் 2.4% உயர்த்தியிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. இதனைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மாவட்ட நூற்பாலைகள் வேலை நிறுத்தம் அறிவித்தன, தமிழக பாஜகவும் திமுகவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
சற்றும் நியாயமற்ற இந்த மின் கட்டண உயர்வை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 72 தொழில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ‘தமிழக தொழில்துறை மின் நுகர்வோர்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி, செப்டம்பர் 7ம் தேதி, பல்லடம் காரணம்பேட்டையில் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்தினர். தமிழக அரசின் கணக்கின்படியே, LT-3B வகையில் 3,18,770 சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த 3,18,770 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடப்பதாகவே நாம் எடுத்து கொள்ள வேண்டும். நிலைமை இப்படியிருக்கையில் தமிழக முதலமைச்சர் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கைகள்,
- சென்ற ஆண்டு வரை, கிலோவாட்டிற்கு ரூ.35/KW ஆக இருந்த (Fixed Demand Charges) நிலைகட்டணத்தை ரூ. 562 வரை உயர்த்தி இருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
- காலை 6 முதல் 10 மணி வரையும் மாலை 5.30 முதல் 9.30 வரையும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு, Peak Hour Tariff என்ற பெயரில் 15% கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கட்டணக் கொள்ளையடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்கப்பட்ட PEAK HOUR TARRIF கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் அல்லது அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தில் குறைத்து கொள்ள வேண்டும்.
- மிகச் சிறிய குறுந்தொழில்களுக்கு (12KW வரை) வழங்கப்படும் மின்சாரம் LT-3A கட்டணத்தில் வழங்கபட வேண்டும். இந்த கட்டண முறையில் ஒரு யுனிட்டிற்கு ரூ. 4.60 கட்டணம் செலுத்தினால் போதும். இதனால், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.
- குடிசை தொழில்களுக்கும், மிகச் சிறிய நிறுவனங்களுக்கும் சலுகை விலையில் மின்சாரம் அளிக்க வேண்டும் என்ற சட்டமே இருக்கும் பொழுது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் எந்த நிறுவனத்திற்கும் இந்த இணைப்பு தருவதில்லை. இதனால் ஒரு யுனிட்டிற்கு ரூ. 4.60 கட்டுவதற்கு பதிலாக LT-3Bல் ரூ. 7.65 வரை கட்டி வருகின்றனர்.
- உயர் அழுத்த இணைப்புகள் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களை போல சிறு குறு தொழில் நிறுவனங்களும் தனியாரிடம் நேரடியாக மின்சாரம் கொள்முதல் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
- மேற்கூரை சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து செயல்படுத்த மாநில அரசு முன் வர வேண்டும். இதன் மூலம் மத்திய அரசு அளிக்கும் 40% மானியத்தை சிறு குறு தொழில்கள் பயன்படுத்த முடியும்.
தொழில்துறையினரின் இந்த ஐந்து கோரிக்கைகளும் மிகவும் நியாயமானவை. இதை நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் தொடர்ந்து இயங்க முடியும்.
மேலும், மத்திய அரசின் பரிந்துரையின் படி, சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி ஆகும் நேரங்களில் (Solar Hours) மின் கட்டணத்தை 10% முதல் 20% குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
சிறுகுறு தொழில்களுக்கான LT-3B கட்டணத்தை குஜராத் மாநிலத்தின் LTMD கட்டணத்துடன் ஒப்பிடும் பொழுது, தமிழக நிறுவனங்கள் 30% வரை கூடுதலாக கட்டும் நிலை இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழக நிறுவனங்கள் வெளி மாநிலங்களில் போட்டி போட முடியாத நிலை ஏற்படும்.
சென்ற ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் பொழுது, மின்சார வாரியத்தின் கடனை அடைக்கவே கட்டணத்தை உயர்த்துகிறோம் என சொன்னார்கள். இருப்பினும் கடந்த 2022-23 நிதியாண்டிலும் மின்சார வாரியத்திற்கு ரூ.7586 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மின் துறைக்கு வரும் வருமானம் எல்லாம் எங்கே செல்கிறது?
திமுக செய்து வரும் ஊழல்களுக்கு, சிறு குறு தொழில்கள் இரையாவதை எப்படி அனுமதிக்க முடியும்?
சிறு குறு தொழில் துறையினரின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு, தமிழக பாஜக சார்பில் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக, தமிழகத் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று, அவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறோம், எனத் தெரிவித்துள்ளார்.