அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரின் அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறி இருக்கிறார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இது இந்தாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முன்னணி வீரரான செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச்சும், அமெரிக்காவைச் சேர்ந்த பென் ஷெல்டனும் அரை இறுதியில் மோதினர்.
இப்போட்டி 2 மணி நேரம் 41 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் 6 – 3, 6 – 2, 7 – 6 (6 – 4) என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வெற்றி பெற்றார். இதன் மூலம் தனது 36-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது அவரது 100-வது அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி என்பதும், இதில் அவரது 87-வது வெற்றி இது என்பதும் கூடுதல் பெருமையாகும்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் யாரை சந்திப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு அரை இறுதியில் டேனியல் மேட்வதேவ், தற்போதைய சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறும் வீரர், ஜோகோவிச்சுடன் இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.