உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரின் சரயு நதியில் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் இராமர் கோயில் கட்ட கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிவைத்து பணிகளைத் தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து, கோயில் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இராமர் கோயில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வருவார்கள் என்பதால், நகரின் உள்கட்டமைப்பு வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அயோத்தியின் சரயு நதியில் ஜடாயு என்ற பெயரில் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்வீர் சிங் சொகுசு தொடங்கிவைத்தார்.
75 இருக்கைகளுடன் இரண்டு தளங்களைக் கொண்ட இந்த சொகுசு கப்பல், நயா படித்துறையில் இருந்து குப்தர் படித்துறை வரை செல்லும். இது 9 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் கடக்கும். சொகுசு கப்பல் பயணத்தின் போது சரயு நதியில் நடைபெறும் தீபாராதனையும் பார்க்க முடியும்.
மேலும், கப்பலில் ஊழியர் ஒருவர் அயோத்தியின் முக்கிய மலைகள் மற்றும் அதன் புராணங்கள் பற்றி பயணிகளுக்கு எடுத்துரைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.