இந்தியாவுக்கு உயர் தொழில் நுட்பங்கள், சாதனங்கள் ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்தியா வந்திருக்கும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் இந்தியாவுக்கு உயா் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுவைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், சபையின் இந்தியக் குழுவின் துணைத் தலைவர் ஆன்டி பிரார் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
‘இந்தியாவுக்குத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கான சட்டம்’ என்ற பெயரிலான இந்த மசோதா இரு நாடுகளிடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக உயா் தொழில்நுட்பத் திறன்கொண்ட கணினிகள், மின்னணு உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய உதவுகிறது.
இதுகுறித்து, இரு நாடாளுமன்ற உறுப்பினா்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்தியாவில் உள்ள நிலையில், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மசோதா அமெரிக்காவிலிருந்து உயர் தொழில்நுட்பக் கணினிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்கும். இதன்மூலம் அமெரிக்க வா்த்தகத் துறையின் உரிமம் இல்லாமலேயே உயர் தொழில்நுட்பப் பொருட்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அனுமதிச் சட்டம் பிரிவு 1211-ன் கீழ், மூன்றாம் நிலை தகுதிப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், அமெரிக்க அரசின் அனுமதி பெற வேண்டும். இந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இல்லை. இந்த நிலையில், இந்த மசோதா நிறைவேறினால், 3-ஆம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்க வழி ஏற்படும். இதன் மூலம் இந்தியாவால் உயர் தொழில் நுட்ப மின்னணு பொருட்களை அமெரிக்காவிடமிருந்து எளிதாக வாங்க முடியும்.