ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. 6 அணிகளுடன் தொடங்கிய நிலையில், 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், இலங்கையின் ஆர்.பிரேமதாசா மைதாத்தில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 2-வது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா மற்றும் கருணரத்னே ஆகியோர் களமிறங்கினார்கள். நிசங்கா ஆட்டத்தின் முதல் பந்திலேயே பௌண்டரி அடித்து அசத்தினார். கருணரத்னே 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய குசல் மெண்டிஸ்ஸும், நிசங்காவும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இலங்கை 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நிசங்கா 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் தனது அரைசதத்தை பதிவு செய்து விட்டு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமா 4, 6 என அடித்து 93 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை எடுத்திருந்தது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது 3 விக்கெட்களையும் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்களையும் எடுத்தனர். ஷோரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்களை எடுத்தார்.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது வங்காளதேச அணி. தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் மெஹிதி ஹசன் களமிறங்கினர். இருவரும் பௌண்டரிகளாக அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து நயிமும் ஆட்டமிழந்தார். பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அனுபவ பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால், வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த, ரஹிம், ஹ்ரிதாய் ஆகியோர் சரிவிலிருந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் அதிகபட்ச ரன்னாக ஹ்ரிதாய் 83 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக மகேஷ் தீக்ஷன, தசுன் ஷனக, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். துனித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
முடிவில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது இலங்கை அணியில் 93 ரன்களை எடுத்த சமரவிக்ரமாவுக்கு வழங்கப்பட்டது.