சீன அதிபரின் கனவுத் திட்டமான “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி” திட்டத்தில் இருந்து வெளியேற இத்தாலி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் சீன பிரதமரிடம் இத்தாலி பிரதமர் தனிப்பட்ட முறையில் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சீனாவின் கனவுத் திட்டமான “பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி” திட்டத்தில் இணையும் ஒப்பந்தத்தில் 2019-ம் ஆண்டு இத்தாலி அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டது. ஆனால், அத்திட்டம் அந்நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க சிறிதும் உதவி செய்யவில்லை என்று இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார்.
எனவே, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பெய்ஜிங்கிற்குச் சென்ற இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியோ தஜானி, பெல்ட் ரோடு பற்றி விமர்சன ரீதியாக பேசியதாகச் செய்திகள் தெரிவித்தன. மேலும், பெல்ட் ரோடு “எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை” என்றும் இத்தாலி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டின் இடையே, சீன பிரதமர் லி கெகியாங்கை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சந்தித்துப் பேசினார். அப்போது, பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சித் திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்ததாகவும், அதேசமயம், சீனாவுடன் நட்புறவை தொடர விரும்புவதாகவும், விரைவில் சீனாவிற்கு வரவிருப்பதாகவும் மெலோனி கூறியதாக அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
சீனாவின் பெல்ட் ரோடு திட்டத்தில் இத்தாலி இணைந்ததால், அமெரிக்காவுடனான உறவில் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதை சரி செய்யவே, அத்திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னரும், பெல்ட் அண்ட் ரோடு முன்மாதிரி திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முன்வந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் பெய்ஜிங்கில் சீனா 3-வது பெல்ட் ரோடு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இத்தாலியின் இந்த முடிவு வெளியாகி சீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. எனினும், இது பற்றி இத்தாலி அரசு இறுதி முடிவெடுக்க வரும் டிசம்பர் மாதம் வரை அவகாசம் இருப்பதாகவும் மெலோனி கூறியிருக்கிறார்.