இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய அறநிலையத் துறையில் என்ன வேலை? சேகர்பாபு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
சனாதன ஒழிப்பு கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, இந்து மதமும் சனாதன தர்மமும் ஒன்று என்று கூறினார். அதன் பிறகு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை வேரறுப்போம் என்று பேசுகிறார்.
இந்து சமய அற நிலையத்துறை அமைச்சராக இருக்கின்ற சேகர்பாபு, இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர் உதயநிதியின் பொறுப்பற்ற பேச்சுக்கு, அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் கண்டம் தெரிவித்த பிறகு, மக்களின் கண்டனத்தைக் கண்டு பயந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சனாதன தர்மம் வேறு இந்து மதம் வேறு என்று மடைமாற்ற முயற்சிக்கிறார்.
சனாதன தர்மம் எப்பொழுதும் எந்த காலத்திலும் யாருக்கும் எதிரானதாக இருந்ததல்ல. சனாதன தர்மம் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் எதிரானதாக இருந்திருந்தால், நமது நாட்டில் எப்படி இஸ்லாமும் கிறிஸ்துவமும் வளர்ந்திருக்க முடியும்? உண்மையான பிரச்சினைகளை திசைதிருப்ப, திமுக மத வெறுப்பைத் தூண்ட முயற்சிக்கிறது.
சனாதன தர்மம், எந்தக் காலத்திலும் சீர்திருத்தங்களை அனுமதித்தே வந்திருக்கிறது. எல்லா சீர்திருத்தங்களையும் தாங்கள்தான் கொண்டு வந்தோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் படிப்பதும் கிடையாது, படித்தவர்களிடம் பேசுவதும் கிடையாது, தெரியாத விஷயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதும் கிடையாது. சனாதன தர்மத்தில் இல்லாத, தனி நபர்கள் உருவாக்கிய வழக்கங்கள் சிலவற்றை நீக்கப் பாடுபட்டவர்களும் சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்கள்தான்.
அன்னியர் படையெடுப்பில் தங்கள் வீட்டுப் பெண்களைக் கைது செய்யப்படாமல் காப்பாற்றும் நோக்கில் உருவான உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து, அந்த வழக்கத்தை நீக்கச் சட்டம் கொண்டு வந்தவர் சனாதன தர்மத்தைப் பின்பற்றிய ராஜா ராம் மோகன் ராய் தான். குழந்தைத் திருமணங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர் குஜராத்தைச் சேர்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றிய மலபாரி என்பவர்தான். விதவைகள் மறுமணச் சட்டத்தைக் கொண்டு வரப் போராடியது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற சனாதன தர்மத்தைச் சார்ந்தவர்தான். யார் வேண்டுமானாலும் இயற்கையினுடைய நியதிகளுக்கு உட்பட்டு நமது வாழ்க்கை வாழலாம் என்பதே சனாதான தர்மம்.
இவையெல்லாம் நடந்தேறிய போது, தமிழகத்தில், திமுக இருந்ததா? திராவிடர் கழகம் இருந்ததா? இல்லை. ஈவெரா பெரியார் பிறந்திருக்கவே இல்லை. ஆனால், தமிழகத்தில் 1967 க்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த, பிறகு பாடப் புத்தகங்களில் இவர்கள் பெயர் எதுவும் இல்லை. வரலாற்றையே மக்களுக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறார்கள். சனாதான தர்மத்தில் முதலமைச்சர் சொல்லுகின்ற குறைபாடுகளை சனாதான தர்மம் உருவாக்கவில்லை. தனி மனிதர்களைச் சார்ந்தவை. சில தனி மனிதர்கள் உருவாக்கினார்கள். முதலமைச்சரின் அறிக்கையில் இதற்காகத்தான் திராவிடர் கழகம் பிறந்தது, இதற்காகத்தான் நீதிக் கட்சி பிறந்தது, இதற்காகத்தான் இராமசாமி நாயக்கர் அவர்கள் பிறந்தார்கள் என்று சொல்லுகின்ற பொய்யை வேண்டுமானால் உங்கள் குடும்பத்துக்குள்ளேயே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருங்கள்.
திமுக கட்சி ஏன் தொடங்கப்பட்டது என்ற உண்மை வரலாறு மக்களுக்குத் தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டில், சனாதன தர்மத்தை எதிர்ப்போம் என்பார்கள். இரண்டாவது ஆண்டில் சனாதான தர்மத்தை வேரறுப்போம் என்பார்கள்.
மூன்றாம் ஆண்டில் சனாதான தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம் என்பார்கள். நான்காவது ஆண்டில், எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் என்று மண்டியிடுவார்கள். ஐந்தாவது ஆண்டு முருகப் பெருமானின் வேலை கையில் தூக்கிக் கொண்டு வீரவேல் வெற்றிவேல் என்று காவடி எடுப்பார்கள்.
இதைத்தான் 25 ஆண்டுகளாக தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக வந்த பிறகு தான் ஜாதி அரசியல் வந்தது. தமிழகத்தில் 37 மாவட்டங்கள், 335 கிராமங்களில் ஜாதி வன்முறைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. கடந்த 30 நாட்களில், தென் தமிழகத்தில் 23 படுகொலைகள் நடந்துள்ளது. இதுதான் திமுகவின் ஜாதி ஒழிப்பு.
தமிழகத்தில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் எண்ணிக்கை 44,000. அற நிலையத் துறை சாராத மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும், திமுக தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
தமிழக அரசு, இது தொடர்பான வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பதில் இல்லை. தேர்தல் வாக்குறுதியில் இந்து கோயில்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறினார்கள் ஆனால் இரண்டு ஆண்டில் 55 கோடி தான் ஒதுக்கி இருக்கிறார்கள். 1986 ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறினார்கள். தற்போது, 2023 இல், அது 4.76 லட்சம் ஏக்கர் நிலமாக மாறி இருக்கிறது. 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது?
தமிழகத்தில் அறநிலையத்துறை மூலம் வரும் வருமானம் 400 கோடியை தாண்டியது இல்லை. முறையாக நிர்வாகம், செய்தால் ஐந்தாயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டும்.
தமிழகத்திற்கு அறநிலையத்துறை தேவையா என்கிற கேள்வியை பாஜக கேட்க தொடங்கியுள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், இந்திய கலாச்சாரத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ, மத ரீதியாக மக்களைப் பிரிக்கிறார். அனைத்து மதத்திற்கும் சமமாக இருங்கள் முதலமைச்சர் அவர்களே.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கொசு டெங்கு மலேரியா என்றார். திமுக எம்பி ஆ. ராஜா, சனாதன தர்மத்தை, HIV தொழுநோய் என்கிறார். திமுக ஆட்சியில் இருக்கும் வரைதான் காவல்துறை வழக்கு பதிவு செய்யாது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையாகும். இவர்கள் மீது தமிழகம் முழுவதும், பொதுமக்களும் தமிழக பாஜக சார்பாகவும் கொடுத்திருக்கும் புகார்கள், ஒரு நாள், வழக்காகப் பதிவு செய்யப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்ததோ அது இவர்களுக்கும் நடக்கும் எனத் தெரிவித்தார்.
பின்னர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை இன்று முற்றுகையிட சென்றனர். ஆனால் அவர்களை போலீஸார் வள்ளுவர் கோட்டம் அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் துணைத் தலைவர்கள் VP துரைசாமி, கரு நாகராஜன், சக்கரவர்த்தி, தேசிய மகளிரணித் தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், ஆன்மீகப் பிரிவு மாநிலத் தலைவர் நாச்சியப்பன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.