உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டி மெக்சிகோவின் ஹெர்மோசில்லோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜாவ்கர், டென்மார்க்கின் மத்தியாஸ் புல்லர்டனை எதிர்த்து விளையாடினார். இதில் இருவரும் தலா 148 புள்ளிகள் குவித்தனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க ஷூட் ஆஃப் கடைபிடிக்கப்பட்டது.
இதிலும் இருவரும் தலா 10 புள்ளிகள் பெற்றனர். எனினும் மத்தியாஸ் புல்லர்டன் செலுத்திய அம்பு மையப்பகுதிக்கு மிக அருகாமையில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2-வது இடம் பிடித்த பிரதமேஷ் ஜாவ்கர் வெள்ளிப் பதக்கம் பெற்றார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்தின் மைக் ஸ்க்லோசர் 150-149 என்ற கணக்கில் இந்தியாவின் அபிஷேக் வர்மாவை தோற்கடித்தார். மகளிருக்கான காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அதிதி சுவாமி, ஜோதி சுரேகா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தனர்.