1882-ம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த சுப்பிரமணிய பாரதி, தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்
தம் தாய்மொழியாம் தமிழின் மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என்று கவிபுனைந்துள்ளார்.
தமிழ், சுதந்திரம், பெண்கள் உரிமை, சாதி ஒழிப்பு, இந்திய விடுதலை, மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவருடைய கவித்திறனை பாராட்டி ‘பாரதி’ என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
இவரது சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் மறைந்தார்.
இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் -11 பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.