தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகம் எதிரில், இன்று சற்று நேரம் முன்னர், 70 வயது மதிக்கத்தக்க பார்வையற்றவர் மற்றும் ஒரு வயதான பெண்மணி மற்றும் ஒரு இளைஞர் என மொத்தம் 3 பேர் திடீரென தீக்குளிக்க முயன்றனர்.
தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருந்த காவல்துறையினர், விரைந்து சென்று, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றினர்.
பின்னர், உடனடியாக ஒரு அட்டோ வரவழைத்து, அவர்கள் மூவரையும், சிகிச்சைக்காக அரசு மருத்துவத்து மனைக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக, அப்பகுதியில் விசாரித்தபோது, மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், வேலை இல்லாததால், குடும்பம் மிகுந்த வறுமையான சூழ்நிலையில் தவித்து வருவதாகவும், அந்த விரக்தியில் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து, இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.