இந்தியாவின் பல பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. சென்னையில் டெங்குவால் 253 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் பெங்களூருவில் உள்ளனர். இதற்கிடையே, டெங்குவால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில், புறநோயாளிகள் பிரிவுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதக் காய்ச்சல் நோயாளிகள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள். ஹைதராபாத்தில் கடந்த ஜூலை மாதத்தில் 164 பேர் டெங்குவால் பாதிகப்பட்டனர். இந்நிலையில், இந்த மாதம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 911 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த மாதம் 5 சதவீதமாக இருந்த டெங்கு பாதிப்பு தற்பொழுது, 15-20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் டெங்கு நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.