ஞானவாபி மசூதியில் நடைபெற்றுவரும் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும் 18-ம் தேதிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. இந்த மசூதி 17-ம் நூற்றாண்டில் இந்து கோயிலை இடித்துவிட்டு ஒளரங்கசீப்பால் கட்டப்பட்டது என்று இந்துக்கள் கூறிவருகின்றனர்.
இது தொடர்பாக, இந்து மதத்தைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனடிப்படையில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் அலகபாத் உயர் நீதிமன்றம் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தை நாடியபோதும், எவ்வித பலனும் இல்லை. மசூதியில் தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இவர்களது ஆய்வுக்கான காலக் கெடு, கடந்த 2-ம் தேதி முடிவடைந்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் அக்டோபர் 6-ம் தேதி ஆய்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில், தொல்லியல் துறையின் ஆய்வுக்குத் தடை கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி, சன்னி வக்பு வாரியம் ஆகியவை தாக்கல் செய்த மனு, இன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.