ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் குளறுப்படிகள் நிகழ்ந்தும் திமுக அரசு மெத்தனப்போக்கில் நடந்து கொண்டதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
ஊழல் திமுக ஆட்சியில், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்றைய முன்தினம் சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டில் பல்வேறு குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிந்தேன்.
சரியான இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காதது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தாதது, வாகன நிறுத்த ஏற்பாடுகளை சரிவர செய்யாதது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒட்டு மொத்த தோல்வியால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் விட, கூட்ட நெரிசலில், பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் முன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எத்தனை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தமிழக அரசும் அவற்றைக் கண்காணித்து, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், ஒட்டு மொத்தமாக இரண்டு தரப்பிலும் தங்கள் கடமைகளிலிருந்து தவறி, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாது, பெருமளவில் புகார்கள் எழுந்தும், பாலியல் சீண்டல்கள் குறித்துப் புகார்கள் வந்தும், தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
எதிர்க்கட்சியினர் தவறே செய்யாவிடினும் அவர்களை காவல்துறை மூலம் துன்புறுத்துவதும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், தங்களைச் சார்ந்தவர்கள் தவறே செய்தாலும், அதனைக் கண்டும் காணாமல் இருப்பதும் திமுகவுக்கு புதிது அல்ல.
ஆனால், இத்தனை பெரிய நிகழ்ச்சி ஒன்றில், ஆயிரம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், திமுக அரசு மெத்தனப்போக்கில் இருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு பல வேண்டப்பட்டவர்களைக் காப்பாற்ற, பொதுமக்களை எத்தனை தூரம் வஞ்சிக்கவும் திமுக தயங்காது என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.