நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை முன்னிட்டு, செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சிறப்புக் கூட்டத் தொடரில் குறிப்பிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து விளக்கம் அளித்திருந்ததோடு, “இந்த சிறப்புக் கூட்டத் தொடரில், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் உரையாடல்களை எதிர்பார்க்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனிடையே, ஜி20 தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து வைத்த அழைப்பிதழிலும், பிரதமர் மோடியின் இந்தோனேஷிய பயண அழைப்பிதழிலும், இந்தியாவுக்கு பதிலாக பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் சர்ச்சையானது.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, செப்டம்பர் 17-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் எதிர்கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார்.