உலகின் முக்கிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், நிர்வகிப்பதிலும் இந்தியர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
அந்த வகையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் குறித்துப் பார்ப்போம்,
லக்ஷ்மன் நரசிம்மன் 1967-ஆம் ஆண்டு புனேவில் பிறந்து வளர்ந்தார். இவர், புனே பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின்னர் பென்சில்வேனியா (Pennsylvania) பல்கலைக்கழகத்தில் உள்ள லாடர்( Lauder) இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டமும், நிதித்துறையில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.
இவர், மெக்கின்சி (McKinsey) நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள நுகர்வோர் பொருள்கள், சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதே போல உலகின் பல வணிகங்கள் நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
பின்னர், 2012-ஆம் ஆண்டு பெப்ஸிகோவில் சேர்ந்து, பல்வேறு நிர்வாக பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும், ரெக்கிட் (Reckitt) என்ற பன்னாட்டு நுகர்வோர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ரெக்கிட்டின் இ-காமர்ஸ் வணிகத்தை வளர்ச்சி அடைவதற்குப் பெரிதும் உதவியுள்ளார். இவ்வாறு, பல நிறுவனங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஸ்டார்பக்ஸ் (starbucks) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.