லிபியாவில் புயல் மற்றும் கனமழையால் இரண்டு அணைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 5000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
லிபியா நாடு தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நாட்டில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. லிபியாவின் கிழக்குப் பகுதியைக் கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன், லிபியாவைச் சக்தி வாய்ந்த டேனியால் புயல் தாக்கியது. இதனால், லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டெர்னா, பெடா, சுசா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
புயலின் காரணமாக, அப்பகுதியில் பலத்த காற்று வீசியதோடு, கனமழையும் கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென, இரு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பலர் வெள்ளத்தில் சிக்கிக் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த, வெள்ளத்தில் சிக்கி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானவா்கள் மாயமாகியுள்ளதாக லிபியாவின் கிழக்கு பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் அரசின் பிரதமா் ஒஸாமா ஹம்தத் தெரிவித்தாா்.
இந்நிலையில், புயல், கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களில் சிக்கி 5,300 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.