இந்தியர்கள் உலகின் பல்வேறு நிறுவனங்களை வழிநடத்துவதிலும், நிர்வகிப்பதிலும் கொடிகட்டி பறக்கிறார்கள்.
அந்த வகையில், உலகின் சாதனை பெண்மணிகளில் ஒருவரும், சேனலின் தலைமைச் செயல் அதிகாரியுமான லீனா நாயர் குறித்து பார்ப்போம்,
1969-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் லீனா நாயர் பிறந்தார். இவர் சாங்லி வால்சந்த் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர், சேவியர் ஸ்கூல் ஆஃப் மேனஜ்மென்ட் கல்லூரியில் தன்னுடைய பட்ட மேற்படிப்பை முடித்துள்ளார். இங்கு, சிறப்பான செயல்பாட்டிற்காக லீனாவிற்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஹிந்துஸ்தான் யூனிலிவரில் சேர்ந்த லீனா, படிப்படியாக உயர்ந்து 2016-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக உயரிய பொறுப்புக்குச் சென்றார். இந்த பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையும், இளம் வயதில் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையையும் லீனா பெற்றார்.
தன்னுடைய கடுமையான உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் உயர்ந்த லீனா, 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபேஷன் நிறுவனமான சேனலின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.