சீனா என்றாலே வித்தியாசமான உணவுகளுக்குப் பெயர்போன நாடு . பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி என்று எதையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை அவற்றைக் கொண்டு வித்தியாசமான, சுவையான உணவுகளைத் தயாரித்து ருசிக்கின்றனர். குறிப்பாக விதவிதமான தெரு உணவுகள் பலவும் சீனாவில் பிரபலம்.
அந்த வகையில் தற்போது Grilled Ice Cube எனப்படும் தீயில் வாட்டப்பட்ட ஐஸ் க்யூப்ஸ் , அங்கு பிரபலமாகி இருக்கிறது. ஜியாங்சி மாகாணத்தின், நான்சாங்கில் உள்ள தெரு உணவுக்கடை ஒன்றில் Grilled Ice Cube செய்யும் வீடியோ வைரலாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பெரிய ஐஸ் துண்டுகளைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனை சமைப்பவர், ஐஸ் கட்டிகளை தீயில் காட்டி சூடாக்கி வாட்டி, அதன் மீது சாஸ் மற்றும் மசாலாவை ஊற்றுகிறார். அதாவது, சூடான தீயில் கிரில் பிளேட்டின் மீது பெரிய பனிக்கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீர்த்துளிகள் உருகி தீ ஜுவாலையில் சொட்டுகின்றன. அப்போது, ஒரு பிரஷ்ஷின் மூலம் எண்ணெயை ஐஸ் மீது விடுகிறார். இதற்குப் பிறகு, பல்வேறு வகையான மசாலாப் பொருள்கள், சாஸ்கள் மற்றும் இறுதியாக எள் உள்ளிட்டவை தூவப்படுகின்றன. அத்துடன், ஐஸ் துண்டுகளின் மீது நறுக்கிய பச்சை மிளகாயை வைத்து பரிமாறப்படுகிறது.
இந்த உணவை, உருகத் தொடங்கும் முன்புவரை சூடாகவும், உருகத் தொடங்கியதும் ஜில்லென குளிர்ந்த பதார்த்தமாகவும் சாப்பிடலாம். இருப்பினும், இந்தச் சிற்றுண்டியை எப்படி சாப்பிடுகின்றனர் என்பது அந்த வீடியோவில் காட்டப்படவில்லை. இது கோடையில் மிகவும் பிரபலமாக உள்ளது, இது இலவச விருந்தாக வழங்கப்படுகிறது.