தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில், அதுவும் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.
நெய் விற்பனையைப் பொறுத்தவரை, 100 மிலி பாக்கெட் ரூ.70 -லிருந்து ரூ.80 ஆகவும், ஜார் ரூ.75 -லிருந்து ரூ. 85 -ஆகவும், ௨௦௦ மிலி ஜார் ரூ.145 -லிருந்து ரூ.160 ஆகவும், 500 மிலி பாக்கெட் ரூ. 310 -லிருந்து ரூ.360 ஆகவும், ஜார் ரூ.315 -லிருந்து ரூ.365 ஆகவும், 1 லிட்டர் பாக்கெட் ரூ.620 -லிருந்து ரூ.690 ஆகவும், ஜார் ரூ. 630 ரூபாயிலிருந்து 700 – ஆகவும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ஒரு லிட்டருக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை உயர்த்தியுள்ளது.
வெண்ணெய், 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் 260 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் 275 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும், என ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு உடனே அதாவது இன்று (14.09.2023) முதல் அமுலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் நிர்வாகத்தின் விலை உயர்வுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய், வெண்ணெய் விற்பனை விலை உயர்வினை பொதுமக்களுக்குத் தெரிவிக்கப் பால் முகவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை.
அத்துடன் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர்ந்து பண்டிகை காலங்கள் நெருங்கி வருகிறது.
மேலும், சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த விலை உயர்வு கடுமையாகப் பாதிக்கும்.
மேலும், ஆவின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய் வரை உயர்த்தியதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுமானால் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
ஆவின் விலை உயர்வுக்கு, பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.