சென்னை விமான நிலையத்தில் 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் ஒரு அணிலைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்குத் தாய் ஏர்வேஸ் விமானம் வந்து இறங்கியது. அதில், பயணம் செய்த இளைஞர் ஒருவர் 2 பிளாஸ்டிக் கூடைகளை வைத்திருந்தார்.
இதனையடுத்து சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் கூடைகளைச் சோதனையிட்ட போது, அவற்றில் 15 அரியவகை மலைப் பாம்பு குட்டிகள் மற்றும் அணில் ஒன்றும் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், இந்த வகை பாம்புகள் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளிலும், குளிர்பிரதேசங்களிலும் இருக்கக்கூடியவை. இந்த பாம்புகள் விஷமற்றவை ஆனால் ஆபத்தானவை.
மேலும், ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடிய அணில் குட்டி ஆப்பிரிக்கக் கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக்கூடியது.
மலைப் பாம்புக் குட்டிகளைக் கடத்தி வந்த பயணியிடம், எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலைப்பாம்பு குட்டி, அணில் ஆகியவை எந்த நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதோ, அதே நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.
அவை சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பப்படுகிறது. இதற்கான விமான செலவுகள் அனைத்தையும் கடத்தி வந்த இளைஞரிடம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.