டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே பிரச்சனையாகிவிடும்.
கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பரவலாக அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் டெங்கு காய்ச்சல் அனைவரையும் பாதிக்கிறது. இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி ( Aedes aegypti ) கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை. அந்த அறிகுறிகளை இப்போது பார்ப்போம்.
1. தொடர்ந்து காய்ச்சலை அனுபவிப்பது:
தொடர்ச்சியான காய்ச்சல் டெங்கு இருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும். காய்ச்சலோடு சேர்த்து தோலில் சிராய்ப்புகள், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவையும் இதன் அறிகுறிகள். இது ஏழு நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் போது அதிக காய்ச்சல், மோசமான தலைவலி, சோர்வு மற்றும் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.
2. தடிப்புகள்:
காய்ச்சல் வந்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு தோலில் தடிப்புகள் தோன்றுவது டெங்கு இருப்பதற்கான குறிகாட்டியாகும். மேற்தோலின் அடியில் உட்புற ரத்தக்கசிவு காரணமாக தோலில் சிராய்ப்புகள் ஏற்படும். இந்த தடிப்புகள் பொதுவாக அம்மை ஏற்படும் பொழுது தோன்றக்கூடிய காயம் போல காணப்படும்.
3. குமட்டல் மற்றும் வாந்தி:
கண்களின் பின்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்த கசிவு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான பிற அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். பொதுவாக இந்த அறிகுறிகள் இரவு நேரத்தில் மோசமாகலாம் என்பதால் பகல் நேரத்தில் இதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியமாக கருதப்படுகிறது.
4. உட்புற ரத்தக்கசிவு:
பொதுவாக டெங்கு காய்ச்சலின் போது பிளேட்டிலெட் செல்களின் எண்ணிக்கை வெகு விரைவாக குறையக்கூடும். இது டெங்கு காய்ச்சலின் மிகவும் தீவிரமான ஒரு நிலையாக கருதப்படுகிறது. இது த்ரோம்போசைட்டோபினியா (Thrombocytopenia) என்று அழைக்கப்படுகிறது. கூடுதலாக டெங்கு காய்ச்சல் இருக்கும் பொழுது குடலின் சுவர்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் மலம் கழிக்கும் பொழுது மலத்தோடு ரத்தம் வெளியேறுகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் கிடையாது. எனினும் அதன் அறிகுறிகள் மோசமாவதை தடுக்க ஒரு சில முயற்சிகளை எடுக்கலாம். நீங்கள் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக அனுபவிக்கும் அறிகுறிகளை அலட்சியமாக கருதக்கூடாது. அவ்வாறு செய்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே விழிப்புடன் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுங்கள்.