திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வரை யாரையும் பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அனைவரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி ( Aedes aegypti ) கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை. காய்ச்சல் வந்த பிறகே தெரிய வருகிறது.
கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் மர்மக் காய்ச்சலுக்கு சிலர் பலியாகும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தார். காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பயிற்சி மாணவி சிந்து உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர்கள், உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றனர்.