இந்தியாவை துண்டாட நினைக்கும் அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக ஆங்கில செய்திச் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், “இது சனாதன தர்மத்தை எதிர்ப்பதற்கான போராட்டம் அல்ல, ஒழிப்பதற்கான போராட்டம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். ஆனால், இதற்கு இண்டியா கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இண்டியா கூட்டணி இந்துக்களுக்கு எதிராக உள்ளது. இந்தியாவை துண்டாட நினைக்கும் இதுபோன்ற அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.
சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசுவது புதிதல்ல. காரணம், சனாதன எதிர்ப்பு என்பது தி.மு.க.வின் முக்கியக் கொள்கை. இதனை 70 ஆண்களாக தி.மு.க. செய்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் மிகவும் துன்பப்படுகின்றனர். எனினும், மொழித் தடையால் நாட்டிலுள்ள மற்ற மாநில மக்களால் இதை புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் சமூக வலைத்தளம் மூலம் அமைச்சர் என்ன சொன்னார் என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.
உதயநிதியின் கருத்து அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவதுபோல உள்ளது. இது பதவியேற்பு உறுதிமொழிக்கு எதிரானது என்று தெரிந்தும், வேண்டுமென்றே உதயநிதி அப்படிப் பேசுகிறார்” என்று கூறியிருக்கிறார்.