பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இன்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கடந்த மே மாதம் 28-ந் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்பதால் இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் முதல் 22-ந் தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பாராளுமன்றச் செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அக்கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
கூடுதலாக, புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்லும்போது, பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.