ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாள் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன. இப்போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் நாட்டுக்குச் சென்று விளையாட முடியாது என்று இந்திய அணி நிர்வாகமான பி.சி.சி.ஐ. தெரிவித்து விட்டது.
ஆகவே, இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டது. இதனால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய ஒரே ஒரு போட்டி மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் நடந்தது. மற்ற போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற்றன. இத்தொடரில் சூப்பர் 4 சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில், இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி சிறிது தாமதமாகத் தொடங்கியது. பின்னர், ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, ஆரம்பம் முதலே இந்திய பச்சுவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறியது. தங்களது முதல் ஓவரிலேயே பும்ராவும், சிராஜும் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் பிறகு, பந்து வீச்சில் சிராஜ் ருத்ரதாண்டவமாடினார்.
இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. சிராஜின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தொடக்க வீரராகக் களமிறங்கிய குசால் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷனாகா ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். மற்றொரு தொடக்க வீரரான பதும் நிசாங்காவும் நிலைக்கவில்லை. சிராஜ் பந்து வீச்சில் 2 ரன்களில் வெளியேறனார். இதனால், 7 ஓவர்கள் முடிவில் வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து இலங்கை அணி தடுமாறியது.
குசால் மெண்டிஸ் மட்டும் இந்திய அணியின் பந்து வீச்சை ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடினார். எனினும், 17 ரன்கள் எடுத்த நிலையில், அவரும் சிராஜ் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதன் பிறகும் இலங்கை வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. தனஞ்சயா டி சில்வா 4 ரன்களில் சிராஜ் பந்து வீச்சில் வெளியேறினார். மறுபுறம் ஹர்திக் பாண்டியா, துனித் வெல்லலகேவை வெளியேற்றினார். அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அணியின் 15-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் அவர் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால், இந்த 1 ரன்தான் இலங்கை அணி 50 ரன்களை எட்டுவதற்கு காரணமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, தனது 3-வது ஓவரையும் அணியின் 16-வது ஓவரையும் வீச வந்த ஹர்திக் பாண்டியா, முதல் 2 பந்துகளிலும் 2 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகியோர் களமிங்கினர். இருவருமே இலங்கையின் பந்து வீச்சை சிதறடித்தனர். 6.1 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக் கனியை சுவைத்தது. சுப்மன் கில் 27 ரன்களும், இஷான் கிஷான் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 8-வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
வெற்றிபெற்ற இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை அணியில் பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்தா, பிரமோத் மதுஷன், மதீஷா பதிரனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.