வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 804 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரச் சேவைகளின் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக டெங்குவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கொசுக்களால் பரவும் டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள், காலநிலை மாற்றத்தால் வேகமாகப் பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்தாண்டு 1,64,563 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், 804 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரச் சேவைகளின் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 281 பேர் உயிரிழந்தனர். இதுவே அதிக எண்ணிக்கையாக இருந்தது.
அதற்கு முன் 2019-ல் 179 பேர் உயிரிழந்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டில் 804 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள முக்தா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.