செப்டம்பர் மாதம் 18 ஆம் உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.
2009-ம் ஆண்டு பாங்காக்கில் உலக எட்டாவது மூங்கில் மாநாடு நடைப்பெற்றது . அன்று முதல் இந்த நாளை உலக மூங்கில் தினமாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தினம் உலக மூங்கில் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மூங்கிலின் பயனைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிட்டத்தட்ட 1500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மூங்கில் பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படுகிறது.
மூங்கில் ஒரு புல் வகையை சேர்ந்தது. புல் வகைகளில் அதிக உயரமாக வளர்வது மூங்கில் மட்டுமே. மூங்கிலின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அந்த உயரத்தை சில ஆண்டுகளிலேயே அடைந்துவிடும். இது, மலைவாழ் மக்கள், விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டித் தரும் மரமாகவும் இருக்கிறது.
இதனால் மூங்கில் சார்ந்த பல தொழில்கள் உருவாகியுள்ளன. சில பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகவும் மூங்கில் பயன்படுகிறது. WBC-யின் முக்கிய குறிக்கோள், மூங்கிலை வைத்துப் பல புதுப்பிக்கக்கூடிய பொருள்கள் செய்து, பிளாஸ்டிக் போன்ற மக்கும் தன்மையற்ற பொருள்களின் பயன்பாட்டைக் குறைப்பது தான்.
பல நாடுகளில் பள்ளிகள் மூங்கிலால் அமைக்கப்படுகின்றன. உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். சீனாவில் உள்ள மின் சியாங் மூங்கில் பாலம் உலகளவில் நீளமான பாலமாக இருக்கிறது.
இந்த ஆண்டு மூங்கில் தினத்தின் தீம் “எங்கள் கிரகத்தில் முதலீடு” என்பதாகும்.