யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரியச் சின்னங்கள்’ பட்டியலில் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் 45-வது உலகப் பாரம்பரிய சின்னங்களுக்கான குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது இந்தியாவில் உள்ள சாந்திநிகேதன் உலகப் பாரம்பரிய சின்னங்களில் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
சாந்திநிகேதன் மேற்கு வங்க மாநிலம் பிா்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழக நகரமாகும். ஜாதி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் களைந்து தியானம் செய்வதற்கான ஆசிரமம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூரால் இங்கு நிறுவப்பட்டது. பின்னர் ரவீந்திரநாத் தாகூரால் 1921-இல் நிறுவப்பட்ட ‘விஸ்வ பாரதி கல்வி நிலையம்’ சாந்திநிகேதனில் உள்ளது.
இது சுதந்திரத்துக்கு முன் கல்லூரியாகச் செயல்பட்ட நிலையில், 1951-ஆம் ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகமாகச் செயல்பட்டு வருகிறது.
இது பழமையான இந்தியப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட கலைக்கான ஒரு மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
யுனெஸ்கோ ‘உலகப் பாரம்பரியச் சின்னங்கள்’ பட்டியலில் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.