பழனி முருகன் கோவிலில் முன்னறிவிப்பின்றி, பஞ்சாமிர்த விலை உயர்த்தப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோவில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழா காலங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் சார்பில், பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காகக் கோவில் நிர்வாகம் சார்பில் பழனி பேருந்து நிலையம், அடிவாரம், மின் இழுவை இரயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் என பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ½ கிலோ எடையில் டப்பா, டின் என 2 வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது.
இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ரூபாய் 5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை கிலோ டப்பாவில் உள்ள பஞ்சாமிர்தம் ரூபாய் 40-க்கும், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட டின் பஞ்சாமிர்தம் ரூபாய் 45-க்கும் விற்கப்படுகிறது.
இதனால் ஏற்கனவே தயாரான பஞ்சாமிர்த டப்பாக்களில் உள்ள விலையைப் பேனாவால் மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து பக்தர்கள் கோவில் நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.