தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால், அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகம் முழுவதும், 150-க்கும் மேற்பட்ட இடங்களில், 1 செ.மீ. முதல் 7 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது.
எனவே, அடுத்த ஐந்து நாட்களுக்குப் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி, சென்னை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும் நாளையும் வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.