சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா. சர்ச் பார்க் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
வழக்கம்போல் தனது வீட்டில் இரவு மீரா தூங்கச் சென்றுள்ளார். மறுநாள், காலை விஜய் ஆண்டனி தனது மகளைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அங்கு மீரா தனது துப்பட்டாவால் ஃபேனில் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதறினார். கண்ணீர்விட்டார்.
விஜய் ஆண்டனியின் அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மீராவை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மீரா ஏற்கனவே இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டார் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.
மீராவுக்கு வயது வெறும் 16. மேலும், மைனர் என்பதாலும், அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்கொலை தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், மீரா மன அழுத்தத்திலிருந்ததும், அதற்காக அவர் கடந்த சில நாட்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனாலும், வேறு காரணங்கள் உள்ளதா என 360 டிகிரி கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இளம் தளிர் மீராவின் தற்கொலை, விஜய் ஆண்டனிக்கு மட்டுமல்லாது திரை உலகினருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.