முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்குப் பூஜை செய்து வழிபட்டன.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு முகாமில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள விநாயகர் கோவிலில், பழங்குடியினரின் பாரம்பரிய முறைப்படி ‘ஆஸ்கார்’ விருது பெற்ற ஆவணப் படத்தில் நடித்த பாகன் பொம்மன் பூஜை செய்தார். வளர்ப்பு யானை கிருஷ்ணா மணி அடித்தபடி கோவிலை வலம் வந்து விநாயகரை வணங்கியது.
இதைதொடர்ந்து, விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் முன்பு அணிவகுத்து நின்ற வளர்ப்பு யானைகள் துதிக்கைகளை உயர்த்தி பிளிறியவாறு விநாயகரை வணங்கின.
பின்பு வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் கேழ்வரகு, ராகி, அரிசி, வெள்ளம், கரும்பு, தாது உப்பு, தேங்காய், மட்டுமின்றி பழங்கள், பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த சிறப்புப் பூஜையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். வளர்ப்பு யானைகள் விநாயகருக்குப் பூஜை செய்வதைப் பார்த்து ரசித்தனர்.