டாப்சிப் யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உலாந்தி வனச்சகரம் டாப்சிலிப் அருகே, கோழிகமுத்தி முகாமில், வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த முகாமில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பாகன்கள் வளர்ப்பு யானைகளைக் குளிக்கவைத்து, பூ மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்து கோவிலுக்குக் கொண்டு வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
அதன்பின், விநாயகப்பெருமானுக்கும், யானைகளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், யானைகளுக்குப் பொங்கல், கொழுக்கட்டை, தேங்காய், வாழைப்பழம், கரும்பு, ஆப்பிள், மாதுளை, அன்னாசி, சத்துமாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில், பாகன்கள், பழங்குடியின மக்கள், வனச்சரக அதிகாரிகள் மற்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.