சேலம் மாவட்டம் வாழப்பாடியில், நடுரோட்டில் பிள்ளையார் சிலையை உடைத்த நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி டவுன் பஞ்சாயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 5-வது வார்ட்டில் சடையப்பர் தெருவில் பந்தல் அமைத்து விநாயகர் சிலை வைத்துச் சிறப்புப் பூஜை செய்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவு 12 மணி அளவில், அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, விநாயகர் சிலையைத் தூக்கி நடு ரோட்டில் போட்டு உடைத்துள்ளனர். இதனையடுத்து, யாராவது பார்த்தால் மாட்டிக் கொள்வோம் என்று அந்த நிமிடமே மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டனர்.
அதிகாலையில், இந்த தகவல் சேலம் மாவட்டம் முழுவதும் பரவியது. இதனையடுத்து, சேலம் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், இளைஞரணித் தலைவர் குணா மற்றும் நிர்வாகிகல் அங்கு குவிந்தனர். மேலும், விநாயகர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், இதற்குக் காரணமானவர்களை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக, சேலம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.