நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாள் நடைபெறுகிறது. இதனையொட்டி, நேற்று முதல் நாள் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, மணிப்பூர் விவகாரத்தை மையப்படுத்தி பிரச்சினையைக் கிளப்பினார். மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், மணிப்பூர் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆ.ராசாவின் இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், கடந்த 75 ஆண்டுக் கால நாடாளுமன்ற ஜனநாயகத்தில், ஒரு சில அரசியல் கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை முறையாகப் பின்பற்றுகின்றன.
ஆனால், ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே அற்ப அரசியல் செய்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் விவாதத்தின் தரத்தைக் குறைக்கும் என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், நமது நாட்டை கண்டித்து ஐரோப்பா நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் குறித்து, நமது நாடாளுமன்றத்தில் பேசுவது எந்த வகையில் நியாயம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஜாதி ரீதியிலான பேச்சு, சனாதனம் பேச்சு உள்ளிட்ட சர்ச்சையில் ஆ.ராசா தொடர்ந்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.