தைவானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்களால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவான் நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாகச் சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. தைவானுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்து வருகிறது. இது சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால், தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல் வழி ரோந்து பணிகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளைச் செய்து வருகிறது. அவ்வப்போது தைவான் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தும் வருகிறது.
இந்நிலையில், 24 மணி நேரத்தில் 103 போர் விமானங்களைக் கொண்டு போர் பயிற்சியைத் தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டது. அதில் 40 விமானங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையைத் தாண்டியதாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. அதேபோல் 9 போர் கப்பல்களும் தைவானின் கடற்பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
தைவானையும் சீனாவையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியின் மத்திய எல்லை கோட்டை தாண்டி, தைவானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள எல்லை வரை நுழைந்ததாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், விமானம் தாங்கிக் கப்பலான ஷான்டாங் உட்பட ஏராளமான கப்பல்களைத் தைவான் கடலுக்கு அருகே சீனா அனுப்பிய நிலையில், மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.