காங்கிரஸ், திமுக உட்பட 30 கட்சிகள் உள்ள இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் கொள்கைகளை வகுப்பதற்காக 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ளது. இந்த குழுவில் 13 கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அறிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் மட்டும் தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இண்டி கூட்டணியிலிருந்து விலகுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில தலைவர்கள் கூறுகையில், இண்டி கூட்டணியில் தேசிய அளவில் இடம் பெறுகிறோம். மாநில அளவில் இடம் பெறுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, கூட்டணியில் ஒட்டு மொத்தமாக ஒருமித்த அளவில் நீடிக்க இயலாது” என்று தெரிவித்தனர்.
இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மிக உறுதியாக எடுத்துள்ளனர். அதாவது மேற்கு வங்காளம், கேரளாவில் கூட்டணி அமைக்க இயலாது. எனவே இந்த 2 மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்துள்ளனர்.
இதேபோல், டெல்லியிலும் கூட்டணி அமைக்க இயலாத நிலை உள்ளது. மேலும், சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட விரும்புகிறது. இதனால் இண்டி கூட்டணியில் தொகுதி பங்கிடுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் கூறியதாவது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியில் அடிப்படை புரிதல் இல்லை. புரிதல் இல்லாமல் எந்த அரசியல் கூட்டணியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எடுத்துள்ள முடிவை இண்டி கூட்டணி தலைவர்களிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர். இது இண்டி கூட்டணி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.