ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த என்கவுன்ட்டர் நிறைவடைந்தது. இராணுவ அதிகாரிகளை கொலை செய்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கடந்த 13-ம் பாதுகாப்புப் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் உள்ளிட்ட இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், மாநில காவல்துறை டி.எஸ்.பி. மற்றும் ராணுவ வீரர் ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு, தீவிரவாதிகளை வேட்டையாடும் படலம் தொடங்கியது. முதல் நாளில் 2 பயங்கரவாதிகளும், மறுநாள் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர். சில தீவிரவாதிகள் பதுங்கி விட்டனர். இதையடுத்து, இந்திய இராணுவம் மற்றும் மாநில காவல்துறை தரப்பில் குவாட்காப்டர்கள், ட்ரோன்கள், புதிய தலைமுறை கேஜெட்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த வேட்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் உசைர் கான், மற்றொரு தீவிரவாதியும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து மாநில காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் விஜய்குமார் கூறுகையில், “கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த கோகர்நாக் ஆபரேஷனில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கமாண்டர் உசைர் கான் உட்பட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த உசைர் கான்தான், இராணுவ கர்னல், மேஜர், டி.எஸ்.பி., இராணுவ வீரர் ஆகியோரின் உயிரிழப்புக் காரணமானவன். உசைர் கான் உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு தீவிரவாதியின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை. ஆனால், ட்ரோன் காட்சிகள் மூலம் அவரது உடலை பார்க்க முடியும்.
இத்துடன் என்கவுன்ட்டர் நிறைவடைந்தது. ஆனால், 2-வது தீவிரவாதியின் உடல் மீட்கப்படும் வரை தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடரும். மேலும், வெடிக்காத வெடிகுண்டுகள் அனைத்தும் அகற்றப்படும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த பல ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிக நீண்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக கோகர்நாக் ஆபரேஷன் அமைந்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் போது இந்திய இராணுவமும், மாநில காவல்துறையும் தேவையான அனைத்து நவீன, அடுத்த தலைமுறை உபகரணங்களை பயன்படுத்தின.
குவாட்காப்டர்கள், ட்ரோன்கள், புதிய தலைமுறை கேஜெட்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய இராணுவம் ஹெக்சாகாப்டரைப் பயன்படுத்தியது. (இலக்கைத் தாக்கி நிர்ணயம் செய்யும் திறன் கொண்ட ட்ரோன்). இது டிஜிட்டல் வீடியோகிராஃபியின் 10 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டது. இதுதான் இந்த ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்தது. சமீப காலங்களில் மிக உயர்தொழில்நுட்ப நடவடிக்கைகளில் ஒன்று இந்த ஆபரேஷன்.
அதேபோல, முழு நடவடிக்கையையும் கண்காணிக்க காடோல் காடுகளுக்கு அருகில் ஒரு கூட்டு கட்டளை மையமும் நிறுவப்பட்டது. மேலும், 19 ஆர்.ஆர். மற்றும் 34 ஆர்.ஆரின் உயரடுக்கு கட்டளைகள் மற்றும் வீரர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாரா கமாண்டோக்கள் தவிர, மலை ஏறும் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் படைகளின் சிறப்பு நடவடிக்கை குழுவினரும் இந்த ஆபரேஷனில் ஈடுபட்டனர்” என்று தெரிவித்தார்.