நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட குழந்தை உயிரிழந்ததன் எதிரொலியாக, நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாஸ்ட்புட் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில், காலாவதியான 50 கிலோ சிக்கன் பறிமுதல் செய்தனர். மேலும், 2 இறைச்சிக் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட குழந்தை உயிரிழந்ததை அடுத்து, ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நெல்லை மாநகர் பகுதியில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட தந்தூரி சிக்கன் மற்றும் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, சுகாதாரமற்ற முறையில் உள்ள சிக்கன் பயன்படுத்திய 5 கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும், பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்தில் 26 கிலோ பொறித்த சிக்கன் குளிர் சாதன பெட்டியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காலாவதி தேதி இல்லாத 50 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு, கடை ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப் போன இறைச்சி உணவுகளை பினாயில் தெளித்து உடனடியாக அழிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிக்கன் ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் கறிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், சமைத்த உணவுப் பொருள்களை ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது என்றும், உணவுப் பொருள்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
திமுக அரசின் மெத்தனப்போக்கால், நாமக்கல்லில் பள்ளி மாணவி பலியானார் என்றும், முன்னரே, இது போன்ற சோதனைகளை நடத்தியிருந்தால், பள்ளி மாணவியின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.