தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அவரவர் தொகுதியில், மக்கள் குறைகளைக் கேட்கவும், தீர்வு காணும் வகையிலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை கொளத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான மு.க.ஸ்டாலின், தற்போது, தமிழக முதல்வராக இருப்பதால், இந்த தொகுதிக்கும், இந்த சட்டமன்ற அலுவலகத்திற்கும், மற்ற தொகுதிகளைவிட கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆட்சியில் மின்வாரியத்தில் கேங்மேன் தேர்வுக்கு 15,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், 9,613 பேர் மட்டுமே அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனால், மற்றவர்கள் அரசு பணி கிடைக்காமல் தவித்து வந்தனர்.
ஆனால், விடுபட்டவர்களுக்கு விரைவில் அரசு பணி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅன்றைய மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்தார். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.
இதனால், விரக்தி அடைந்த கேங்மேன்கள், தமிழகமே திரும்பிபார்க்கும் வகையில் ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என தீர்மானித்தனர்.
இதனயைடுத்து, இன்று காலை சென்னை கொளத்தூரில் உள்ள தமிழக முதலமைச்சரின் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திற்குள், திடீரென உள்ளே புகுந்தனர்.
இதனைச் சற்றும் எதிர்பாராத அங்கிருந்த ஊழியர்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பை மீறி உள்ளே புகுந்தனர்.
உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மின்னல் வேகத்தில் வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொத்தாக தூக்கி கைது செய்தனர்.
இதனிடையே, கேங்மேன்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கும், முதல்வருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.