திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், 6 -வதாக ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது.
திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமி, தனது பெற்றோருடன் பாதயாத்திரை சென்றார். அப்போது, சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து, கொலைகார சிறுத்தை பிடிக்க வேண்டும் எனப் பக்தர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க நடைபாதை மற்றும் வனப்பகுதியில் 300-க்கும் மேல் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி, அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
மேலும், சிறுத்தையைப் பிடிக்க நடைபாதை அருகே கூண்டு வைத்தனர். இதில், இதுவரை 5 சிறுத்தைகள் சிக்கியுள்ளது. கூண்டில் சிக்கிய 5 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. மற்ற 2 சிறுத்தைகள் திருப்பதி உயிரியல் பூங்காவில் உள்ளது.
தற்போது, மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. அந்த சிறுத்தையைத் திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்குக் கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.