அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலக்க துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 14 -ம் தேதி மாற்றப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நிலவிய நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, வழக்கின் தீர்ப்பைச் செப்டம்பர் 20 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், 29 -ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ஜாமீன் மனு தள்ளுபடிக்கான காரணம் பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.