இந்தியர்கள் உலகளவில் கடினமான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள்.
அந்தவரிசையில், நோவார்டிஸ் (Novartis) தலைமை நிர்வாக அதிகாரி வசந்த் நரசிம்மன் குறித்துப் பார்ப்போம்,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வசந்த் நரசிம்மன் 1976-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் (Pittsburgh) நகரில் பிறந்தார். இவரது தந்தை ஹோகனேஸ் (Hoeganaes) நிறுவனத்தின் நிர்வாகியாகவும், இவரது தாய் அமெரிக்க அரசின் மின் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் அணுசக்தி பொறியாளராகவும் பதவி வகித்தனர்.
வசந்த் நரசிம்மன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உயிரி அறிவியலில் இளங்கலை பட்டமும், Harvard மருத்துவப் பள்ளியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
சாண்டோஸ் என்ற சர்வதேச நிறுவனத்தில் பயோபார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஆன்காலஜி இன்ஜெக்டபிள்ஸின் (Biopharmaceuticals and Oncology Injectables) உலகளாவிய தலைவராக பணியாற்றினார்.
பின்னர், 2005-ஆம் ஆண்டு நோவார்டிஸில் (Novartis) சேர்ந்த வசந்த் நரசிம்மன், 2014 முதல் 2016 வரை, நோவார்டிஸ் மருந்துகளுக்கான உலகளாவிய மேம்பாட்டுத் தலைவர், உலகளாவிய மருந்து மேம்பாட்டுத் தலைவர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.
இவ்வாறு படிப்படியாக உயர்ந்த இவர், நோவார்டிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நோவார்டிஸ் (Novartis) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவர், அமெரிக்கத் தேசிய மருத்துவக் கழகத்தின் உறுப்பினராகவும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் உறுப்பினர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.